மும்பை துறைமுகத்தில் முடங்கியுள்ள கன்டெய்னர்களின் 15 நாள் வாடகை ரத்து
மும்பை:மேற்காசிய நாடுகளில் நீடித்து வரும் போர் காரணமாக, மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள கன்டெய்னர்களுக்கான வாடகையை 15 நாட்களுக்கு தள்ளுபடி செய்வதாக அத்துறைமுகம் அறிவித்துள்ளது.
இது குறித்து துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர் காரணமாக, கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், அந்த பகுதிக்கு செல்ல வேண்டிய கன்டெய்னர்கள், மும்பை துறைமுகத்திலேயே தேக்கமடைந்துள்ளன.
இந்த சூழலில், ஏற்றுமதியாளர்களின் சுமையை குறைக்க, 15 நாட்களுக்கு கன்டெய்னர்களுக்கான இட வாடகையை முழுமையாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண சலுகை உணவு பொருட்கள் மற்றும் அழுகும் பொருட்களை கொண்டு செல்லும் குளிர்சாதன வசதியுள்ள கன்டெய்னர்களுக்கான மின் கட்டணத்தில் 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பிப்., 28 முதல் மார்ச் 14 வரை துறைமுகத்துக்குள் முடங்கியுள்ள கன்டெய்னர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.