கிராமங்களில் பம்ப்செட் விற்பனை 'விறுவிறு' மூலப்பொருட்கள் விலை குறைக்க வேண்டுகோள்

மேட்டுப்பாளையம்: -: கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்ட கிராமப்புறங்களில் பம்ப்செட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 3,500க்கும் மேற்பட்ட பம்ப்செட் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பம்ப் செட்டுகள் கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உட்பட மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகின்றன. தற்போது, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் இதன் தேவை அதிகரித்துள்ளதால், வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

கோவை மாவட்ட பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:

குளிர்காலம் மற்றும் பிற காலங்களில் தினமும், 2,000ம் முதல் 5,000ம் பம்ப்செட்கள் உற்பத்தி செய்வோம். பொதுவாக கோடைகாலத்தில் தினமும் 25 ஆயிரம் பம்ப்செட்கள் உற்பத்தி செய்வோம். நடப்பாண்டு, இதில்15 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளோம். ஆனால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

பம்ப்செட்களுக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருள்களான ஸ்டீல், செம்பு, உருக்கு இரும்பு போன்ற பல்வேறு மூலப்பொருள்களின் விலை உயர்வால், பம்ப்செட்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தான் உற்பத்தியை குறைத்துள்ளோம். செம்பு ஒரு கிலோ ரூ.800க்கு விற்பனை ஆன நிலையில் தற்போது ரூ.1,500 வரை விற்பனை ஆகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் தினமும் வீடு, விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு தேவை. கொரோனா, குளிர்காலம், மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களினால் சில ஆண்டுகளாக பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி சரிவை நோக்கி நகர்ந்தன. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு, உற்பத்தியும் பெரும் அளவு சரிந்தன.

தற்போது தேவை அதிகரித்தும், விலை உயர்வால் வியாபாரம் சூடுபிடித்தும், உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement