'காங். , வெற்றியை தடுக்க தேர்தல் கமிஷன் சதி'

புதுடில்லி: ''கேரளாவில், காங்கிரசின் வெற்றியை தடுக்க தேர்தல் கமிஷன் சதி செய்கிறது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில், வேண்டுமென்றே அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுகிறது,'' என, அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யும், பொதுச்செயலருமான கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டினார்.

கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு மொத்தமுள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.

இந்நிலையில், தலைநகர் டில்லியில், தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து, காங்., பொதுச்செயலரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான வேணுகோபால் நேற்று கூறியதாவது:

கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள், மே 4ல் வெளியாகும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில், ஏப்., 9ம் தேதியே தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளுக்கு பின், வேட்பாளர்களுக்கு முழுமையான பிரசாரத்திற்கு வெறும், 10 நாட்கள் மட்டுமே கிடைக்கும். அந்த நாட்களும் புனித வாரத்துடன் ஒத்துப்போகின்றன.

கேரள மக்களுக்கு புனித வாரம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் புனித வெள்ளி போன்ற நாட்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது.

புனித வாரம் மற்றும் விஷு பண்டிகைக்கு பின் தேர்தலை நடத்தினாலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்காது.

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில், வேண்டுமென்றே அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எங்கள் வெற்றியை தடுக்க தேர்தல் கமிஷன் சதி செய்கிறது. அவர்களின் உள் நோக்கம் நன்றாக புரிகிறது.

நாங்கள் பிரசாரம் செய்வதை தடுக்கவே இது போன்ற முறையில் தேர்தல் அட்டவணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஹரியானா, மஹாராஷ் டிரா சட்டசபை தேர்தல்களி லும் இது போன்ற அணுகுமுறை தான் கடைப் பிடிக்கப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை மிகவும் மர்மமாக உள்ளது. என்ன நடந்தாலும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளர் பட்டியலை

வெளியிட்டது பா.ஜ.,

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும், 47 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டது. மாநிலத்தில் தன் செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், பல முக்கிய தலைவர்களை அக்கட்சி களமிறக்கியுள்ளது. கேரள பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், நேமம் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் - கழகூட்டம்; பா.ஜ., மூத்த தலைவர் சுரேந்திரன் - மஞ்சேஸ்வரம்; ஷோபா சுரேந்திரன் - பாலக்காடு; முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீலேகா - வட்டியூர்க்காவு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மறைந்த காங்., மூத்த தலைவர் கருணாகரனின் மகள் பத்மஜா, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Advertisement