மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கணவன் கைது திருநெல்வேலியில் தொடரும் கொடூரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பணகுடியை சேர்ந்தவர் சேர்மதுரை 42. மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துச்செல்வி 36. நாகர்கோவில் அரசு பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சேர்மதுரை, அடிக்கடி அவரை தாக்கியுள்ளார். இதனால் முத்துசெல்வி வள்ளியூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்தார். நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்த முத்துசெல்வியை பின் தொடர்ந்த சேர்மதுரை, அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார்.

தோள்பட்டை, வயிறு, தாடை என பல்வேறு இடங்களில் வெட்டு காயமடைந்த முத்துசெல்வி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சேர்மதுரையை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வள்ளியூர் போலீசார் சேர்மதுரையை கைது செய்தனர்.

Advertisement