ஒடிஷா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!: காப்பாற்ற முயன்ற 11 ஊழியர்கள் காயம்
புவனேஸ்வர்: ஒடிஷாவில், அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 நோயாளிகள் உயிரிழந்தனர். தீ விபத்தில் இருந்து நோயாளிகளை காப்பாற்ற சென்ற, 11 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
ஒடிஷாவின் கட்டாக் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ., எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில், திடீரென நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
மின் தடை உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும், தீ விபத்தில் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்ட, 10 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற சென்றவர்களில், 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
'அதிகாலை நேரத்தில் இரு முறை மின் தடை ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மின்சாரம் வந்தபோது, ஐ.சி.யூ., அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதியே புகைமூட்டமாக மாறியது' என, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் குறித்து கேள்விபட்டதும், மருத்துவமனைக்கு விரைந்த ஆளும் பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி, தீ விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
பிரதமர் இரங்கல் இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் வேதனையும் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒடிஷாவின் கட்டாக் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை தருகிறது. சொந்தங்களை இழந்து வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
'உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் வழங்கப்படும்' என குறிப்பிட்டுஉள்ளார்.
மேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '