அழகிய ஆர்கிட் மலர்கள்: வியக்கும் சுற்றுலா பயணிகள்
பந்தலுார்: ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், வளர்க்கப்படும் ஆர்கிட் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நம் நாட்டில், 1300, நீலகிரி உயர்ச்சூழல் மண்டலத்தில், 240 வகை ஆர்கிட் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
அதில், நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், சிறப்பு ஆர்கிட் இல்லம் அமைக்கப்பட்டு, அங்கு அழியும் நிலையில் உள்ள பல அரிய வகை ஆர்கிட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில், 'பாறையில் வளரும் லித்தோ பைட்டுகள் (பாறைவால் தாவரங்கள்), மரங்களில் பரவும் 'எபி பைட்டுகள்'(வான் வழி தாவரங்கள்), பல்வேறு வகை மண்களில் வளரும், பிளாட்டந்தெரா சிலியாரீஸ், சப்புக் ஆர்கிட், சிம்போடியம், வேண்டா லிபாரிஸ், பல்போ பைலட், ஸ்பைராந்தஸ் வகை ஆர்கிட்கள்,' உள்ளது.
அதில், 'நரிவால், சிம்பீடியம், பயர் ஸ்டார், எபிபிடிக், மூலிகை ஆர்கிட்கள், கலப்பின ஆர்கிட்கள்,'என, தற்போது, 85 வகையான ஆர்கிட்கள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
தற்போது, ஜீன்பூல் தாவரவியல் மையத்திற்கு, உள்ளூர் மக்கள் மற்றும் மாணவர்கள், வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில், இங்குள்ள குடிலில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்களை பார்த்து ரசிப்பதுடன், இதன் விபரங்களை கேட்டு வியப்படைகின்றனர்.