மேற்கு வங்க தேர்தலில் 226 தொகுதிகளில் எங்களுக்கு நிச்சய வெற்றி; ஆரூடம் சொல்கிறார் மம்தா

1

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்டு உள்ளார். 226 தொகுதிகளில் நிச்சய வெற்றி உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கமாக பல கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்கம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இம்முறை 2 கட்டங்களாக மட்டும் நடக்கிறது. ஓட்டுப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணி கட்சியான அனித் தாபா தலைமையிலான பாரதிய கோர்க்கா பிரஜா தந்திரிக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கி உள்ளார்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மம்தா பானர்ஜி கூறியதாவது;

இம்முறை எங்களின் வேட்பாளர்களில் 226 பேர் வெற்றி பெறுவார்கள். பட்டியலில் பெயர் இல்லாத தலைவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் கட்சி அமைப்புகளில் அங்கீகாரத்துடன் பணி அமர்த்தப்படுவார்கள்.

தேர்தலில் பாஜ தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

சட்டசபை தேர்தலில் 2021ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற பவானிபுர் தொகுதியில் மம்தா மீண்டும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் பாஜவின் சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என்று பாஜ நேற்று அறிவித்தது.

திரிணமுல் காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த அவர், 2021ல் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் ஐக்கியமானார். பின்னர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மம்தாவை தோற்கடித்தார். அதன் பின்னர் பவானிபுர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மம்தா வென்றார். இந்த இரு தொகுதிகளிலும் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

Advertisement