தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பு: பூத் ஏஜெண்டுகளுக்கும் சிறப்பு பரிசு அறிவிப்பு
தியாகதுருகம்: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வெற்றி பெற முனைப்புடன் ஈடுபட்டு வருவதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. கடந்த 15 ம் தேதி இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
வேட்பு மனு தாக்கல் வரும் 30 ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 6ம் தேதி முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை 7ம் தேதியும், 9ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஓட்டுப்பதிவு 23ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை ஏப் 4ம் தேதி நடக்க உள்ளது.
பிரதான கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இதுவரை முடியவில்லை. அதேபோல் சில முக்கிய கட்சிகள் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.
அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இனி காலதாமதம் இன்றி அவசரமாக முடிவெடுத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை அரசியல் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தேர்தலுக்காக கடந்த ஆறு மாதமாகவே அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெகு தீவிரமாக பூத் வாதியாக கணக்கெடுத்து களப்பணியாற்றி வருகின்றனர்.
ஆளுங்கட்சியான தி.மு.க., பணத்தை தாராளமாக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
பிரதான கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், வாய்ப்பு கேட்டு பலர் கட்சி தலைமையிடம் முகாமிட்டு உள்ளனர்.
வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ள ஓரிருவர் மட்டும் தற்போது தொகுதி முழுதும் தங்களின் நம்பிக்கைக்குரியவர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, கிராமங்களில் துவங்கி நகரம் வரை ஓட்டுக்களை அள்ள திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தி.மு.க., கூட்டணியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க., கூட்டணியும், முதல் தேர்தலி லேயே வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உற்சாகத்துடன் த.வெ.க.,வினரும், கடந்த தேர்தலை விட ஓட்டு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பிற கட்சிகளும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வரும் தேர்தலில் போட்டி பலமாக இருக்கும் என்பதால் வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கும். இதனால் ஒவ்வொரு ஓட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே உள்ளதால் தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு ஓட்டுக் களை வசப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஒவ்வொரு பூத்திலும் ஓட்டு வித்தியாசத்தை அதிகரித்து தரும் பொறுப்பாளர்களுக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கும் சிறப்பு பரிசு தருவதாக சில பிரதான கட்சிகள் இப்போதே அறிவித்துள்ளது.
கோடை காலம் துவங்க உள்ள நிலையில் அதனை தோற்கடிக்கும் வகையில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
டீசல் இன்ஜினை மின்சார இன்ஜினாக மாற்றியதால் ரூ.6 ஆயிரம் கோடி சேமித்தது ரயில்வே
-
சீரான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பரிதவிப்பு
-
அரூர் சப்-டிவிஷனில் 132 துப்பாக்கி ஒப்படைப்பு
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் பலி
-
காரிமங்கலத்தில் அபாயகரமான முறையில் சாலையை கடக்கும் கல்லுாரி மாணவியர்
-
100 சதவீதம் வாக்களிப்பு அவசியம் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்