முந்திரியில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பால் விவசாயிகள் கவலை! மாவட்டத்தில் மகசூல் பாதியாக குறையும் அபாயம்

விருத்தாசலம்: மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முந்திரியில் தேயிலை கொசு, மாவுப்பூச்சி, பூப்பேன் மற்றும் கொட்டை துளைப்பான் தாக்குதல் அதிகமாக காணப்படுவதால், நடப்பாண்டு மகசூல் குறையுமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ெஹக்டர் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

முந்திரி மரங்களை பொருத்தவரை ஜனவரி மாதம் துவங்கி, பிப்ரவரி முதல் வாரத்தில் பூ வைக்க துவங்கும். மார்ச் மாதம் துவங்கி, மே மாதல் இறுதி வரை அறுவடை பணிகள் நடக்கும். முந்திரியில் பூச்சி தாக்கதல் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தண்டு, வேர் துளைப்பான், தேயிலை கொசு, மாவுப்பூச்சி, பூப்பேன், தளிர் பிணைக்கும் புழு, இலை சுருட்டு புழு, கம்பளி புழு மற்றும் கொட்டை துளைப்பான்களால் ஆண்டுதோறும், 60 சதவீதம் வரை விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கிறது. தேயிலை கொசு, மாவுப்பூச்சி, பூப்பேன் ஆகியவை பூக்களை தாக்கி கருகச் செய்கின்றன. தளிர் பிணைக்கும் பு ழு மற்றும் இலை சுருட்டு புழுக்கள் தளிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. கொட்டை துளைப்பான் பூச்சிகள் காய்கள் மற்றும் கொட்டைகளை துளைத்து சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியங்குப்பம், சின்னகண்டியங்குப்பம், நறுமணம், கோட்டேரி, வீரட்டிக்குப்பம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முந்திரி மரங்களில், பூச்சி தாக்கு தல் அதிகமாக உள்ளது.

இதனால், பூக்கள் மற்றும் முந்திரி பிஞ்சுகள் கருகி வருகின்றன. மேலும், முந்திரி பிஞ்சுகளில் கொட்டை துளைப்பான் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், நடப்பாண்டு மகசூல் பாதியாக குறையுமென விவசாயிகள் கவலையடைந்துள்ள னர்.

இதுகுறித்து முந்திரி விவசாயிகள் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜனவரி கடைசி வாரம் துவங்கி மே மாதம் வரை முந்திரி மகசூல் இருக்கும். ஜனவரி முதல் வாரத்தில் முந்திரி பூக்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முதல் மருத்து தெளிப்போம்.

பின்னர், மார்ச் மாதம் பிஞ்சு மற்றும் பூக்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இரண்டாவது மருந்து தெளிப்போம்.

பின்னர், ஏப்ரல் முதல் வாரத்தில் மூன்றாவது மருந்து தெளிப்போம். ஆண்டுதோறும் மூன்று முறை முந்திரியில் மருந்து தெளிப்போம்.

ஒவ்வொரு முறை மருந்து தெளிக்கும் போதும், ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டு பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மருந்து தெளித்தபோது, பூச்சி தாக்குதல் கட்டுக்குள் வந்தது. ஆனால், நடப்பாண்டு இரண்டாவது முறை மருந்து தெளித்தும் இதுவரை பூச்சி தாக்குதல் குறையவில்லை. ஏக்கருக்கு, 10 மூட்டை வரை முந்திரி மகசூல் கிடைக்கும். ஆனால், நடப்பாண்டு மகசூ ல் பாதியாக குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'விருத்தாசலத்தில் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. ஆனால், தோட்டக்கலை அதிகாரிகள் யாரும் பருவகாலங்களில் வந்து மரங்களை பார்வையிடுவதில் லை.

தோட்டகலை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று, நேரில் ஆய்வு செய்து, அந்தந்த கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடந்தி, ஆலோசனை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

Advertisement