வருமான வரி அதிகாரிகளாக நடித்து ரூ.6 லட்சம் பறித்த 4 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜவுளிக் கடையில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து ரூ.6 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அக்ரஹாரம் தெருவில் தனியார் ஜவுளி கடை உள்ளது. இங்கு ஒரு கும்பல் மார்ச் 6 ல் வருமான வரித்துறை அதிகாரிகள் என நுழைந்து சோதனையிட்டனர். ஊழியர்களை மிரட்டி ரூ.6 லட்சத்தை பறித்துள்ளனர்.
மேலாளர் முகம்மது ரிஸ்வான், பணியாளர் முகம்மது சுகைன் ஆகியோரை காரில் அழைத்துச் சென்று 1 கி.மீ., சென்ற பின் இறக்கி விட்டு தப்பியுள்ளனர்.
சந்தேகம் அடைந்த முகம்மது ரிஸ்வான் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கை தீவிர குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கருப்பசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்க எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்திய கார் பரமக்குடியை சேர்ந்தது எனத்தெரிய வந்தது.
காரை ஓட்டி வந்த பரமக்குடியை சேர்ந்த அர்ஜூனன் 31, கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், மானாமதுரையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் 39, ஹரிஹரன் 28, கோட்டை முத்து 29, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் 30, சவுந்திரபாண்டியன், மானாமதுரையை சேர்ந்த பாலமுருகன், ரிஷி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.