குகேஷ் - பிரக்ஞானந்தா மோதல் * ஆனந்த் கணிப்பு

புதுடில்லி: ''வரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார். உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷை எதிர்த்து களமிறங்குவார்,'' என ஆனந்த் தெரிவித்துள்ளார்.
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.
இதுகுறித்து ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 56, கூறியது:
கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என நம்புகிறேன். இவருக்கு அதிக அனுபவம் உள்ளது. அதேநேரம் கடந்த சில மாதங்களாக சற்று மந்தமாக செயல்படுகிறார். ஆனால் மனதளவில் ஏற்கனவே வலிமையாக உள்ளார். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தயாராக உள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷை எதிர்த்து களமிறங்குவார்
இத்தொடரை நடத்த சிறந்த இடத்தை, சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') தேடியது. தற்போது முடிவு செய்யப்பட்டுள்ள சைப்ரஸ் தீவு, சிறப்பானது. இதை அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 35, கூறுகையில்,'' கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் நகமுரா, பேபியானோ அல்லது நெதர்லாந்தின் அனிஷ் கிரி என இதில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவர். இதுதான் தங்களுக்கான தருணம் என்பதை அனைவரும் அறிவர். இதை எப்படியும் தவறவிடக் கூடாது என களமிறங்குவர்,'' என்றார்.

Advertisement