வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 கோடி மஞ்சள் வர்த்தகம்

சே லம் மாவட்டம், ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது. 8,394 மூட்டைகள் கொண்ட, 5,026 குவின்டால், மஞ்சளை விவசாயிகள் கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர்.

ஒரு குவின்டால் விரலி ரகம், 14,569 முதல், 17,609 ரூபாய்; உருண்டை ரகம், 13,169 முதல், 15,559 ரூபாய்; பனங்காலி ரகம், 25,689 முதல், 33,555 ரூபாய் வரை விலை போனது. இதன் வாயிலாக, 7.39 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. முந்தைய ஏலத்துடன் ஒப்பிடுகையில், விரலி ரகம், 406 ரூபாய், உருண்டை ரகம், 870 ரூபாய் விலை அதிகரித்தது. பனங்காலி ரகம், 114 ரூபாய் குறைந்தது. வரத்து அதிகரித்து, 7.39 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

70 ஆண்டுகளில் முதல் முறை

ஹோண்டா வருவாய் இழப்பு

க டந்த 70 ஆண்டுகளில், முதல் முறையாக வருவாய் இழப்பை சந்திக்க இருப்பதாக, ஜப்பான் கார் நிறுவனமான ஹோண்டா மோட்டார் அறிவித்துள்ளது.

இந்திய மதிப்பில், 1.40 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை, இந்நிறுவனம் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் குறையும் இந்நிறுவன மின்சார கார்களின் விற்பனை, சீன மின்சார கார்களின் போட்டித்தன்மை, குறிப்பிட்ட சந்தைகளில் எரிவாயு வாகனங்களுக்கு ஆதரவாக மாறும் கொள்கைகள் காரணமாக, இந்நிறுவனம் வாகன கொள்கையை மாற்றி அமைத்துள்ளது.

அதாவது, மின்சார கார் தயாரிப்புக்கு செய்துள்ள முதலீடுகளை குறைத்து, ஹைபிரிட் கார்களை உற்பத்தி செய்வதில் ஹோண்டா நிறுவனம் அதிக கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement