3.78 லட்சம் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு பரிசோதனை
கோவை: மாவட்டத்தில் பிறவி குறைபாடு பாதிப்பை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்குவதற்காக, கடந்த ஓராண்டில் மட்டும், 3.78 லட்சம் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், பிறந்தது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு, பிறவி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை பருவ நோய்கள், வளர்ச்சி தாமதம் மற்றும் குறைபாடு ஆகியற்றுக்கு, பரிசோதனை, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இளம்வயதில் நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதனால், திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில், 2025 ஏப். முதல் தற்போது வரை அங்கன்வாடியில், 1 லட்சத்து 44 ஆயிரத்து 732 பேர் மற்றும் பள்ளிகளில், 2 லட்சத்து 33 ஆயிரத்து 876 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிறவி இருதய குறைபாட்டுடன், 476 பேர் கண்டறியப்பட்டனர். இதில், 391 பேருக்கு மருந்துகள், 85 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. வாத இருதய நோய் சார்ந்து, 11 பேருக்கு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன.
பிறக்கும் போதே கால் வளைவு பாதிப்பு கொண்ட, 49 பேரில், 37 பேருக்கு மாவுக்கட்டு, 12 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உதடு, அன்னபிளவுக்கு 12 பேர், காது கேளாமைக்கு 22 பேர், முதுகு தண்டுவட நரம்பு பாதிப்பு 9 பேருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டது.
@block_B@
சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,'' பிறவி குறைபாட்டுக்கான அனைத்து பாதிப்புகளுக்கும் தனித்தனியாக பரிசோதித்துள்ளோம். பாதிப்பின் தன்மைக்கேற்ப, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முழுமையாக குணமாகும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்,'' என்றார்.block_B