பணத்தை காட்டு; வேட்பாளராகு; விஜய் அறிவிப்பால் த.வெ.க., 'ஷாக்'

9

- நமது நிருபர் -


'தேர்தல் செலவுக்கு விஜயிடம் எதிர்பார்க்க வேண்டாம். பணம் இருந்தால் மட்டுமே சீட் கொடுக்கப்படும்' என த.வெ.க., அறிவித்ததால், நிர்வாகிகள் பலரும் பின்வாங்கி விட்டனர். இதனால், வேட்பாளர்கள் கிடைக்காமல், த.வெ.க., தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



இதுகுறித்து, த.வெ.க., மாநில நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக தேர்தலில், குறைந்தது 2 கோடி ரூபாய் செலவு செய்தால் மட்டுமே, 'டிபாசிட்' கிடைக்கும் நிலைமை உள்ளது. அதனால், துணிந்து செலவு செய்யும் வசதியானவர்களுக்கு மட்டுமே 'சீட்' என, ஆரம்பத்திலேயே விஜய் சொல்லிவிட்டார்.


அதன்படி, 5 கோடி ரூபாயில் இருந்து, 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தால் தான், வெற்றியை நெருங்க முடியும் என்பதால், அதற்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்க த.வெ.க., தலைமை முடிவு செய்துள்ளது.


அதன்படி, சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், அரியலுார், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், விஜய் நிர்ணயம் செய்த தகுதியுடன் கூடிய கட்சியினர் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் கடந்த 9ம் தேதி விஜய் ஆலோசனை நடத்தினார். ஆனால், ஆலோசனையில் பங்கேற்ற பின், தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பின்வாங்கி விட்டனர்.


இந்நிலையில், அடுத்தக்கட்ட வேட்பாளர் தேர்வில், 330 பேரை தேர்வு செய்து, அவர்களிடம் கட்சி தலைமை ஆலோசித்தது. அதில், 32 பேர் மட்டுமே வேட்பாளராக முன்வந்துள்ளனர். தேர்தல் செலவுக்கு தலைமை பணம் தராது என்ற நிலைப்பாட்டினால், வேட்பாளர் ஆவதற்கு மாவட்ட செயலர்கள் பலரும் முன்வரவில்லை.


இதை மனதில் வைத்துதான், 45 முதல் 60 'சீட்' கொடுத்தால், எந்த கூட்டணிக்கும் போகலாம் என மாவட்ட செயலர்கள் கூறியிருந்தனர். த.வெ.க.,வில் போட்டியிட, லட்சம் பேர் ஆர்வமாக இருந்தாலும், தலைமையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆள் கிடைக்கவில்லை. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வில் ஆள் தேடும் முயற்சியில், த.வெ.க., இறங்கி உள்ளது.


இதே நிலைமைதான், புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி, வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 30 பேரில், 12 பேர், தங்களால் தனியாக செலவு செய்ய முடியாது என தயக்கம் காட்டுகின்றனர். இதனால், 18ம் தேதி அறிவிக்கப்பட இருந்த புதுச்சேரி வேட்பாளர் பட்டியல் தள்ளிப் போயிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதற்கிடையில், வேட்பாளர் தேர்வின்போது, தாராளமாக செலவு செய்ய தயாராக இருக்கிறேன் என சொல்லும் நிர்வாகிகளிடம், 'உங்களை எப்படி நம்புவது' என கேள்வி எழுப்பும் த.வெ.க., தலைமை, 'உங்களிடம் பணம் இருப்பதை உறுதி செய்ய, 1 கோடி ரூபாய்க்கு, வங்கி வரைவோலை எடுத்து, கட்சிக்கு கொடுங்கள்' என சொல்கின்றனர். இதனால், சீட் கேட்டு வந்த பலரும் தெறித்து ஓடுவதாக கட்சியினர் புலம்புகின்றனர்.

Advertisement