நீதிபதி முன் ஆஜர்படுத்துவதில் 25 நிமிடம் தாமதம் கொலை வழக்கில் ஜாமின் கேட்டவர் மனு தள்ளுபடி
பெங்களூரு: 'கொலை வழக்கில் கைதானவரை, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த, 25 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டாலும், சில வழக்குகளில் இதை ஏற்றுக் கொள்ளலாம்' என கூறி, மனுதாரரின் ஜாமின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்., புராவை சேர்ந்தவர் கமலா. தன் கணவரை கொலை செய்ய, சிவராஜ் என்பவருக்கு பணம் கொடுத்தார். 2025 மே 23ம் தேதி இரவு, கமலாவின் கணவர் சுதர்சனை, சிவராஜ் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
விசாரணை நடத்திய போலீசார், 2025 மே 25ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ஷிவமொக்கா மாவட்டம், காச்சினகட்டே பஸ் நிலையத்தில் சிவராஜை கைது செய்தனர். கைது தொடர்பான நடவடிக்கைகளை முடித்து, மறுநாள் (26ம் தேதி) மாலை 5:25 மணிக்கு நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய போலீசார், சிக்கமகளூரு இரண்டாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்போது சிவராஜ் தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவராஜ் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்தாமல், 25 நிமிடம் தாமதமாக ஆஜர்படுத்தினர். இது சட்டத்துக்கு எதிரான செயல்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் வாதிடுகையில், 'கைது செய்யப்பட்ட மனுதாரரை, 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், அவரை இந்த காலக்கெடு முடிந்து, 25 நிமிடம் தாமதமாக, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
'கைது செய்யப்பட்ட ஒருவரை, 24 மணி நேரத்துக்கு மேல் காவலில் வைத்திருக்க கூடாது என்று அரசியலமைப்பின் அடிப்படை உரிமை மீறலாக அமைந்து உள்ளது. எனவே, மனுதாரரை வழக்கமான ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவி த்த அரசு தரப்பு வக்கீல், 'மனுதாரர் சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை. போலீஸ் நிலையத்தில் இருந்து நீதிபதி வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு:
சில வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவரை சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தவறுவது, வழக்கின் விசாரணைக்கு தடையாக அமையாது.
கைது தொடர்பான நடவடிக்கைகள் முடிந்தபின், குற்றம் சாட்டப்பட்வரை போலீசார், நீதிபதி இல்லத்துக்கு அழைத்து சென்றாலும், அந்த பயணம் நீண்ட துாரம் கொண்டதாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.
இது தொடர்பாக மும்பை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள், இக்கருத்தை தெளிவுபடுத்தி உள்ளன. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
மேலும்
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
லாரி மோதி ஒருவர் பலி
-
தாய், குழந்தை சடலம் மீட்பு
-
கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்