பச்சைவண்ணர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சைவண்ணர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையில் திருப்பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 11ல் துவக்கி வைத்தார்.

இதில், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சைவண்ணர் கோவில் திருப்பணியையும் தமிழக முதல்வர் துவக்கினார். இதையடுத்து மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு ஜூலை 14ம் தேதி பாலாலயம் நடந்தது. இதையடுத்து மூலவர் சன்னிதி கோபுரம் சீரமைப்பு பணி துவக்கப்பட்டு பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் ஒரு மாதமாக பச்சைவண்ணர் கோவிலில் எவ்வித பணியும் நடைபெறாமல், திருப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது என, பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே,கோவில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் பச்சைவண்ணர் கோவில் திருப்பணிக்கான நிதி வந்துள்ளது. இருநாட்களில் பணி துவக்கப்படும்' என்றார்.

Advertisement