புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு நீண்ட இழுபறிக்கு பின் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ.,- அ.தி.மு.க., - ல.ஜ.க., ஆகிய கட்சிகள் உள்ளடங்கிய தே.ஜ., கூட்டணி நேற்று முன்தினம் உறுதியானது.

அதனைத் தொடர்ந்து நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்., -16; பா.ஜ.,-10; அ.தி.மு.க.,-2; ல.ஜ.க.,-2 என பங்கீடு செய்யப்பட்டது. தொகுதி எண்ணிக்கை பங்கீடு முடிந்த நிலையில், எந்தந்த தொகுதி, யார் யாருக்கு ஒதுக்குவது என்பதில் கடும் குழப்பம் நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின் மாலை 3 மணிக்கு கட்சி வாரியாக தொகுதி ஒதுக்கீடு முடிவானது.

என்.ஆர்.காங்., தொகுதி அதில், என்.ஆர்.காங்., கட்சிக்கு திருபுவனை (தனி), நெட்டப்பாக்கம் (தனி), வில்லியனுார், மங்கலம், ஏம்பலம் (தனி), பாகூர், அரியாங்குப்பம், கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, நெடுங்காடு (தனி), காரைக்கால் வடக்கு ஆகிய 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், 9 தொகுதிகளுக்கு நேற்று முன்தினமே மனு தாக்கல் செய்துவிட்டனர். மீதமுள்ள 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.

பா.ஜ., விற்கான தொகுதி பா.ஜ.,விற்கு மண்ணாடிப்பட்டு, ஊசுடு(தனி), காலாப்பட்டு, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, திருநள்ளாறு, நிரவி, காரைக்கால் (வடக்கு) மற்றும் மாகி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 5 தொகுதிகளுக்கு மார்ச் 20 அன்று மனு தாக்கல் செய்துவிட்டனர். மீதமுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் வடக்கு தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

அ.தி.மு.க., - ல.ஜ.க., தொகுதிகள்: அ.தி.மு.க.,விற்கு உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளும், ல.ஜ.க.,விற்கு காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதில், இரு கட்சியிலும், தலா ஒருவர் வேறு கட்சியில் இருந்து இணைய உள்ளவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement