கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அறிக்கை அனுப்ப பொது பார்வையாளர் உத்தரவு

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகளை பொது பார்வையாளர், போலீஸ் பார்வையாளர் நேற்று கூட்டாக ஆய்வு செய்தனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.ஓ., அந்தஸ்திலான அதிகாரி அபிராமி தலைமையில் குழு செயல்படுகிறது.

தொலைபேசி வாயிலாகவும், சி-விஜில் செயலி வாயிலாகவும் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள், அருகாமையில் உள்ள பறக்கும் படைக்கு தெரிவிக்கப்படுகிறது. பறக்கும் படையினர் அவ்விடத்துக்கு செல்வது ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கின்றனர்.

பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினருக்கு வழங்கிய வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அவ்வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

இதேபோல், 'டிவி'களில் ஒளிபரப்பாகும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை கண்காணிக்க தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்விரு மையங்களையும் பொது பார்வையாளர் சஞ்சய்குமார், போலீஸ் பார்வையாளர் சுதீர்குமார் போரிகா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். டி.ஆர்.ஓ. அபிராமி விளக்கினார்.

மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமார், எஸ்.பி. கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உடனிருந்தனர்.

இதுவரை 110 புகார்கள் வந்திருக்கின்றன; அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. என்ன விதமான புகார்கள் வருகின்றன, இலவச பொருட்கள் வழங்கப்படுகிறதா; கூப்பன் தருகிறார்களா, போஸ்டர் கிழிக்கவில்லையா என புகார்களின் தன்மை என்ன என்பதை பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.

கட்டுப்பாட்டு அறைக்கு ஒவ்வொரு நாளும் வரும் புகார்கள், அதன் தன்மை, எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தினமும் அனுப்ப வேண்டுமென பொதுப்பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement