அரியலுார் அருகே பிணத்தை எரித்த முதியவர் மர்மமான நிலையில் பலி

பெரம்பலுார் : அரியலுார் அருகே, எரியும் சிதையில் தவறி விழுந்து, முதியவர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


அரியலுார் மாவட்டம், குமுழியத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 55, என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை, நேற்று முன்தினம் இரவு அக்கிராமத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டும் பணி நடந்தது. இந்த பணியில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு அவரது மகன் சக்திவேல் உட்பட நான்கு பேர் ஈடுபட்டனர்.நேற்று காலை ராமதாஸின் உறவினர் ஒருவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக மயானத்தின் அருகே சென்றபோது, சிதையில் உடல் சரியாக எரியாமல் கிடப்பதைக்

கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் எரியூட்டிய நான்கு பேரை அழைத்து, சத்தம் போட்டுள்ளார்.
இரவில் பெய்த மழையினால் நெருப்பு அணைந்திருக்கலாம் என நினைத்த சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் அறிவழகன், புண்ணிய மூர்த்தி, அவசர அவசரமாக மண்ணெண்ணெய் ஊற்றி அந்த உடலை மீண்டும் முழுமையாக எரியூட்டியுள்ளனர். உடலை முழுமையாக எரியூட்டி முடித்த பின்னர் தான், சக்திவேலின் தந்தை தங்கராசுவைக் காணவில்லை என அவர்களுக்கு தெரிந்தது.


ஒருவேளை எரியூட்டும் பணியின்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், சிதை எரிந்து முடித்த பிறகு சாம்பலை விலக்கிப் பார்த்துள்ளனர். அங்கு இரு மண்டை ஓடுகளும், கூடுதல் எலும்புகளும் இருந்ததைக் கண்டு அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பிணத்தை எரியூட்டும்போது, தங்கராசு மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் நிலைதடுமாறி எரியும் சிதையின் மீது விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரும்புலிகுறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement