சிறுவாபுரி கோவிலுக்கு செல்லும் சாலை 4 வழியாக விரிவாக்க நடவடிக்கை
சென்னை: சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளை, தமிழக நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேட்டில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செவ்வாய் கிழமை மற்றும் விடுமுறை நாட்களில், கட்டுக்கடங்காத பக்தர்கள் வருவதால், கோவிலுக்கு செல்லும் சின்னம்பேடு சாலையில், 2.9 கி.மீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறுவாபுரி முருகன் கோவில் வரை, வாகனங்கள் செல்ல அனுமதிப்பது இல்லை.
கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பொது போக்குவரத்து வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக, இந்த சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, அறநிலையத் துறை பரிந்துரை செய்தது. இதையேற்ற நெடுஞ்சாலைத் துறை, இப்பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் துவங்கி, சின்னம்பேடு காலனி வரை, 1.20 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 6.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், சாலை விரிவாக்கம் மட்டுமின்றி, நில எடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. சின்னம்பேடு காலனி பகுதியில் குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. சட்டசபை தேர்தல் முடிந்ததும், ஏப்ரல் மாத இறுதியில், இப்பணிகள் துவக்கப்பட உள்ளன.