அணைக்கட்டில் நீர் திறக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு என 'பேனர்'
தலைவாசல்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, பெரியேரி வழியே வசிஷ்ட நதி செல்கிறது. அந்த நதி குறுக்கே, வெள்ளாறு அணைக்கட்டு உள்ளது. அதன்மூலம், 25 ஏரிகளில் உள்ள, 2,725 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
அணைக்கட்டில் இருந்து நீர் திறக்க, வசிஷ்ட நதி விவசாயிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, பிப்., 18ல், பொதுப்பணித்துறையின் நீர்வள பிரிவு அலுவலர்கள், தண்ணீர் திறந்தனர்.
அப்போது பெரியேரி மக்கள், 'போதிய மழை இல்லாத நிலையில், குறைவாக உள்ள தண்ணீரை திறந்துவிட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்' எனக்கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். பின், அணைக்கட்டில் நீர் நிறுத்தப்பட்டது.
ஆனால் சித்தேரி, கோவிந்தம்பாளையம், பாக்கம்பாடி பகுதிகளை சேர்ந்த அணைக்கட்டு கீழ்புறம் உள்ள பயிர்கள், வறட்சியில் உள்ளதால் நீர் திறக்க, விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.
பெரியேரி கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறக்கவில்லை.
இதனால், சித்தேரி, ஆறகளூர், கோவிந்தம்பாளையம், பாக்கம்பாடி உட்பட, 5 கிராமங்களை சேர்ந்த, ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர், 'தண்ணீர் திறக்கவில்லை எனில் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்' என, ஏரி பகுதிகளில் பேனர்கள் வைத்துள்ளனர்.