வேலை மோசடி: ரூ.35 லட்சம் இழந்த பெண்
ராமநாதபுரம்: போலி விளம்பரத்தை நம்பி பெண் ஒருவர் ரூ.35 லட்சம் இழந்துள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த 30 வயது பெண் வீட்டில் இருந்தபடி பகுதி நேர வேலை தேடினார். சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற விளம்பரத்தை பார்த்தார். அதில்அவர்கள் அளிக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பி அதில் சேர்ந்தார்.
ஆரம்பத்தில் எளிமையான போட்டிகள் தந்ததால் அதிக பணம் சேர்ந்தது. கடைசியில் அந்த பணத்தை குறிப்பிட்ட செயலியில் இருந்து எடுக்க விரும்பினார். அதனை எடுப்பதற்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கூறி யுள்ளனர்.
உடனே அவர்கள் கேட்டபடி பணத்தை அனுப்பினார். பல்வேறு காரணங்களை கூறி தொடர்ந்து பணம் கேட்டனர்.
பல தவணைகளாக ரூ.35 லட்சம் வரை செலுத்தினார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தப் பெண் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி அதில் இருந்த ரூ.7 லட்சத்தை மீட்டனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.