மனைவி உட்பட 5 பேர் மீது ஆசிட் ஊற்றிய நபருக்கு வலை

சித்ரதுர்கா: குடும்ப தகராறில் மனைவி உட்பட 5 பேர் மீது ஆசிட் ஊற்றியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சித்ரதுர்கா டவுன் மலப்பனஹட்டியில் வசிப்பவர் முகமது சுகைல், 44. இவரது மனைவி தசீனா பானு. தம்பதிக்கு, 11 வயதில் மகள் உள்ளார். குடும்ப தகராறில் எட்டு மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்தார் மனைவி தீசனா பானு; மகளுடன் பெங்களூரில் வசித்தார்.

ரம்ஜானை கொண்டாட தன் சகோதரி நக்மா வீட்டிற்கு நேற்று முன்தினம் மகளுடன், தசீனா பானு சென்றார். இதை அறிந்த கணவர் அங்கு சென்று, மனைவியிடம் தகராறு செய்தார்.

திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தசீனா பானு, அவரது சகோதரிகள் நக்மா, நேஹா, தனது மகள், நேஹாவின் 4 வயது மகள் மீது முகமது சுகைல் வீசினார். இதில், ஐந்து பேரின் கை, கால்களில் ஆசிட் பட்டது. வலியால் அலறி துடித்தனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், முகமது சுகைல் அங்கிருந்து தப்பினார். ஆசிட் வீச்சில் காயம் அடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சித்ரதுர்கா எஸ்.பி., ரஞ்சித் குமார் பண்டாரு கூறுகையில், ''குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவி மீது முகமது சுகைல் ஆசிட் வீசி உள்ளார். அவரை காப்பாற்ற வந்த இரு சிறுமியர் உட்பட மேலும் நான்கு பேர் மீதும் ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பி உள்ளார். ஆசிட் வீச்சில் காயம் அடைந்த ஐந்து பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தசீனாவை அரிவாளால் முகமது சுகைல் தாக்கி உள்ளார். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து உள்ளோம்,'' என்றார்.

Advertisement