எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது

11

நமது நிருபர்



மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து எல்பிஜி எரிவாயு சரக்கு கப்பல் 'பைக்ஸிஸ் பயோனியர் 'மங்களூரு துறைமுகம் வந்தடைந்தது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்காசியாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இந்த ஜலசந்தி சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்தாக திகழ்வதால், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



நீடித்து வரும் போர், இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகத்தைப் பாதித்தது. இதன் விளைவாக, வீடுகளின் சமையலறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஹோட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி விநியோகம் ஆரம்பத்தில் குறைக்கப்பட்டது. ஆனாலும் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயு சரக்கு கப்பல் ஒன்று இந்தியாவை வந்தடைந்துள்ளது.


47,236 டன் மொத்த எடை கொண்ட, எண்ணெய்க் கப்பல், காலை 6 மணியளவில் மங்களூரு துறைமுகம் வந்தடைந்தது. இந்தக் கப்பல் 'பைக்ஸிஸ் பயோனியர் ', பிப்ரவரி 14ம் தேதி டெக்சாஸிலிருந்து புறப்பட்ட நிலையில் தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளது. தற்போது நீடிக்கும் தட்டுப்பாடுகளை சமாளிக்க இந்த கப்பலில் உள்ள எல்பிஜி எரிவாயு உதவியாக இருக்கும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement