தொடர் தோல்வி தொகுதிக்கு 33 பேர் மனு நேர்காணல் சென்றவர்களை கலாய்த்த முதல்வர்
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் இருந்து நேர் காணலுக்கு சென்ற தி.மு.க., நிர்வாகி களிடம் தொடர் தோல்வியை சந்தித்த தொகுதியில் போட்டியிட 33 பேர் வந்திருக்கிறீர்களே என முதல்வர் ஸ்டாலின் கலாய்த்தார்.
நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க., சார்பில் 53 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். இதில் நேர்காணலில் 10 பெண்கள் உட்பட 33 பேர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் அதிகமானோர் பங்கேற்ற தொகுதி இது. நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் முதல் கேள்வியாக தொடர் தோல்வியை சந்தித்த நிலக்கோட்டையில் போட்டியிட 33 பேர் வந்திருக்கிறீர்களே எனது முதல்வர் கலாய்த்து உள்ளார்.
அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின், இத்தனை முறை வேட்பாளர் போட்டியிட்டும் தொகுதியில் வெற்றி பெற முடியவில்லையே என்ன காரணம் என்று கேட்டபோது, சரியான வேட்பாளர் இல்லை. கட்சியில் ஒற்றுமை இல்லை என கூறி உள்ளனர். தற்போது ஒற்றுமையாக உள்ளீர்களா என மீண்டும் முதல்வர் கேட்டுள்ளார். இதன்பின் பெண்களிடம் தி.மு.க.,வின் திட்டங்கள் பொதுமக்களிடம் போய் சேர்ந்துள்ளதா என கேட்க அவர்களும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் போய் சேர்ந்துள்ளது என கூறினர்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதை போல் 1971 தேர்தலுக்கு பிறகு இத்தொகுதியில் தி.மு.க., வெற்றி பெறவில்லை. 89, 96ல் கூட்டணி சார்பில் காங்.,கை சேர்ந்த பொன்னம்மாள் வெற்றி பெற்றார். அதன் பிறகு அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றது.