தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தமிழக மகளிர் அணிக்கு 'வெள்ளி'

சென்னை: ஒடிஷா மாநிலத்தில் நடந்த தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவில் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.

அகில இந்திய வாலிபால் சம்மேளனம் சார்பில், 26வது தேசிய வாலிபால் போட்டி, ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில், கடந்த 14ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இரு பாலருக்குமான இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தின.

இதில், துவக்க போட்டிகள் முதலே சிறப்பாக ஆடிய தமிழக பெண்கள் அணி, காலிறுத்திக்கு முன்னேறி, அப்போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. அதில் முதல் செட்டை 15 - -25 என இழந்த தமிழக அணியின் 'சிங்க பெண்கள்' அடுத்த செட்களை 25 - -23, 25 - -22, 25 - -19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து நடந்த அரையிறுதியில், ஒடிஷா அணியை தமிழக அணி எதிர்கொண்டது. முதல் செட்டை 20 - -25 என்ற கணக்கில் தமிழக அணி, 25- - 18 என்ற கணக்கில் அடுத்த செட்டை கைப்பற்றியது. அனல் பறந்த மூன்றாவது செட்டை மீண்டும் 23- - 25 என்ற கணக்கில் ஒடிஷா கைப்பற்றியது.

இதனால், இறுதிப்போட்டிக்கு செல்வது யார் என்ற போராட்டத்தில் ஒடிஷாவின் கையோங்கியது. ஆனால், விறுவிறுப்பான அடுத்த இரண்டு செட்களையும் 29 - -27, 15 - -05 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து, இறுதி போட்டியில் கேரளா அணியை எதிர்கொண்டு, 25 - -16, 25 - -19, 25 - 14 என்ற புள்ளிக்கணக்கில் பின்னடைவை சந்தித்து, வெள்ளிப் பதக்கம் வென்றது.

Advertisement