ஓட்டல்களில் எரிபொருளாக மரத்துண்டு

திருப்பூர்: திருப்பூரில் வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, ஓட்டல் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.வளைகுடா நாடுகளில் போர் காரணமாக, சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியிருக்கிறது.

இருப்பினும், 'மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சீரான சிலிண்டர் வினியோகம் நடந்து வருகிறது' எனக் கூறினாலும், சிறு ஓட்டல் நடத்துவோர், தள்ளுவண்டிகளில் உணவகம் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், விறகு அடுப்பை பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். தற்போது, விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ள நிலையில், மர வேலைபாடுகள் செய்யும் இடங்களில் இருந்து வீணாகும், மரத்துண்டுகள், விறகு தேவைக்காக விற்கப்படுகின்றன; அவை, கிலோ, 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.பெரிய ஓட்டல் நிர்வாகத்தினர், முன்பதிவு செய்து, கூடுதல் விலை கொடுத்து அவற்றை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும் நிலையில், சிறிய உணவகங்களுக்கு அவை கூட கிடைப்பதில்லை என, கடைக்காரர்கள் புலம்புகின்றனர். இதேநிலை நீடித்தால், வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற அச்சம், சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டிக் கடை நடத்துவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.--

Advertisement