தேர்தல் கெடுபிடியால் பட்டு சேலை விற்பனை...படுமந்தம்! கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிப்பு

காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தல் கெடுபிடி தீவிரமாகியுள்ள நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடப்பதால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வந்து பட்டு சேலை வாங்குவோர் எண்ணிக்கை சரிகிறது. இதனால், காஞ்சிபுரத்தின் பட்டு சேலை வியாபாரம் மந்தமடைந்து வருகிறது. தமிழகத்தில், ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

குறிப்பாக, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்காமல் தடுக்க, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், நான்கு சட்டசபை தொகுதியிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என, 24 குழுவினர் பணியில் உள்ளனர்.

தயக்கம் மாவட்டத்தில் 12 இடங்களில், 24 மணி நேரமும் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். 10,000 முதல் 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புடைய பொருட்களை எடுத்து செல்வோரிடம், தேர்தல் பறக்கும் படை விசாரணை நடத்துகின்றனர். உரிய ஆவணம் இல்லாவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால், வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும், ரொக்கமாக பணத்தை வெளியே எடுத்துச் செல்ல தயங்குகின்றனர்.

காஞ்சிபுரத்தில் நடக்கும் பட்டு சேலை வியாபாரத்தில், கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடக்கும். ஏராளமானோர் ரொக்கமாகவே பணத்தை கொண்டு வந்து சேலைகளை வாங்கி செல்வது வழக்கம். பங்குனி மாதம், திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டு சேலை வியாபாரம் நடக்கும்.

குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பலர் காரில் வந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பட்டு சேலைகள் வாங்கி செல்வர்.

கவலை தற்போது, தேர்தலுக்காக வாகன சோதனை கெடுபிடியாக இருப்பதால், பட்டு சேலை வாங்க வருவதை பலரும் தவிர்க்கின்றனர். பல கடைகள் மூட வேண்டிய நிலையில் உள்ளன.

மேலும், வியாபாரம் குறைவதால் பட்டு சேலை உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நெசவாளர்களும் மறைமுகமாக இதில் பாதிக்கப் படுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பட்டு சேலை கடைகளில், ஆண்டுக்கு 200 கோடி ரூபாயும், பட்டு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 100 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் பட்டு சேலை வியாபாரம் நடக்கிறது. இம்மாதம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் பாதிக்கும் என, நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, வெள்ளி விலை உயர்வால், பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், கோடிக்கணக்கான ரூபாய் பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளால், பட்டு சேலை தேக்கம் மேலும் அதிகரிக்கும் என, நெசவாளர்கள் கவலையில் உள்ளனர்.

வருகை குறைவு இதுகுறித்து பட்டு சேலை உற்பத்தியாளர் மேகநாதன் என்பவர் கூறியதாவது:

தேர்தல் கட்டுப்பாடுகளால், வெளியூர் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டது. அவர்கள், ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பட்டு சேலை வாங்கிச் செல்வர். குறிப்பாக, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், பட்டு சேலை மீது அதிக ஆர்வம் உடையவர்கள். அதிக விலை மதிப்புள்ள சேலைகளை வாங்குவர்.

ஆனால், காரில் ரொக்கமாக பணத்தை கொண்டு வந்தால், தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுவர் என பயந்து, தேர்தல் முடிந்த பின், பட்டு சேலை வாங்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக, ஆந்திர மாநில வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரம் வருவதை இப்போது குறைத்துக்கொண்டனர்.

இதனால், கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதித்துள்ளது. வியாபாரம் குறைந்தால், உற்பத்தியும் குறையும். நெசவாளர்கள் வேலை குறைந்து பாதிப்படைகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணத்திற்காக கொண்டு

வந்த ரூ.2.50 லட்சம் பறிமுதல்

திருத்தணி: பொன்பாடி சோதனைச்சாவடியில், போதிய ஆவ ணமின்றி திருமண செலவிற்காக கொண்டு வரப்பட்ட 2.50 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொன்பாடி சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் போதிய ஆவணங்கள் இல்லாமல், 2.50 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசராவ் என்றும், இவர் தன் மகள் திருமணத்திற்காக காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுப்பதற்காக தன் குடும்பத்துடன் பணத்தை எடுத்து வந்ததும் தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement