சிறுவர்களைக் கவரும் சாயல்குடி ஏணி மிட்டாய் :விழாக்காலங்களிலும் விற்பனை

சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர்களைக் கவரும் சீனி மிட்டாய் எனப்படும் ஏணி மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக தின்பண்ட கடைகளில் இனிப்பு, காரம் உள்ளிட்டவைகள் விற்பனை செய்தாலும் சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏணி மிட்டாய் சிறுவர்களை கவரும் விதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருக்கும் சீனி மிட்டாய் வியாபாரி செல்வராஜ் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாயல்குடி சீனி மிட்டாய் மற்றும் ஏணி மிட்டாய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மிக்சர், அல்வா உள்ளிட்ட கார வகைகளுக்கு மத்தியில் சீனி மிட்டாயை தனியாக ஒரு பெரிய பாத்திரத்தில் அடுக்கி வைத்து அவற்றை விற்பனை செய்கிறோம். சாயல்குடிக்கு பகுதிகளில் ஒரு கிலோ சீனி மிட்டாய் ரூ.160 விற்பனை செய்யப்படுகிறது.

இதை தயாரிக்க பச்சரிசி 5 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். 300 கிராம் உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நன்கு தோசை பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சொம்பில் அடிப்பகுதியில் துவாரம் இட்டு அவற்றை எண்ணெய் சட்டியில் வைத்து அடுக்கடுக்காக ஏணி வடிவத்தில் சுற்றிவர பொரித்தெடுக்க வேண்டும்.

அதற்கு முன்பாக சீனி அல்லது கருப்பட்டி மற்றும் மண்ட வெல்லம் இவற்றைக் கொண்டும் பாகு தயாரிக்கலாம். அந்தப் பாகின் நிறத்திற்கு தகுந்தாற் போல் வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் மாற்றமடையும். பாத்திரத்தில் கம்பி பதத்தில் பாகு தயாரித்து அவற்றில் பொரித்தெடுத்த சீனி மிட்டாயை முக்கி எடுக்க வேண்டும். இனிப்பு பாகு அவற்றில் ஊறிக் கொள்ளும்.

அவற்றை சுற்றிலும் வட்ட வடிவமாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஏணி போன்று அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இதன் மகத்துவம் அறிந்து விரும்பி சாப்பிடுகின்றனர். செயற்கை நிறமூட்டப்பட்ட ரசாயன கலப்புள்ள தின்பண்டங்களுக்கு மாற்றாக இயற்கையான முறையில் செய்யக்கூடிய சீனி மிட்டாய்கள் பிரபலம். வெளியூர் மக்கள் ஆர்வமுடன் கேட்டு வாங்கி செல்கின்றனர்.

--

Advertisement