'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'

பெங்களூரு: இளம் தலைமுறையினர் அறிவு செல்வத்தை வளர்க்கும் இடமாக, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் உருவெடுக்கும் என்று, தினமலரை தனது குடும்பமாக நினைக்கும், ஓய்வு வங்கி அதிகாரி சங்கர நாராயணன் பெருமிதமாக கூறினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, தினமலர் அலுவலகத்தின் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, வங்கியில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், மல்லேஸ்வரம் 18 வது கிராசில் வசிப்பவருமான சங்கர நாராயணன், 71, தனது மனைவியும், ஓய்வு பேராசிரியையுமான ரமா சங்கர், 67 ஆகியோர் நேற்று வந்தனர். ஆன்மிகம் தொடர்பான 300 க்கும் மேற்பட்ட புத்தகங்களை, நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.

அறிவு சொத்து பின், தம்பதி கூறியதாவது:

பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு பின், அதிக தமிழ் புத்தகங்களை இங்கு தான் பார்க்கிறோம். பெயருக்கு ஏற்றார்போல புத்தக கடல் தான் இது. எங்கள் வீட்டிலும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என 1,000 புத்தகங்கள் உள்ளன.

இப்போது 300 புத்தகங்கள் கொடுத்து உள்ளோம். வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக புத்தகங்களை எடுத்து வருகிறோம். நாங்கள் தினமலரின் பல ஆண்டு வாசகர்கள். தினமலர் நாளிதழை எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக பார்க்கிறோம். நமது வாழ்வில் பலவற்றை அன்பளிப்பாக கொடுக்கலாம். ஆனால் எங்களை பொறுத்தவரை, புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவதே சிறந்தது. புத்தகங்கள் தலைமுறைகளை வளர்க்கிறது. அறிவு சொத்தை அள்ளி வழங்குகிறது. இளம் தலைமுறையினர் அறிவு செல்வத்தை வளர்க்கும் இடமாக, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் உருவெடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இங்கு வந்ததும் 'அந்துமணி பதில்கள்', 'அந்துமணியின் பா.கே.ப., புத்தகங்கள்' படித்தோம். தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பொக்கிஷம்.

இந்த நுாலகத்தை திறந்து இருப்பது புதிய முயற்சி. தினமலர் நிறுவனத்தை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை. இங்கு கன்னட புத்தகங்களும் இருப்பது சிறப்பு. மெம்பர்ஷிப்புக்கு ஏற்பாடு செய்வதுடன், நுாலகத்தை இன்னும் விரிவுபடுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுதந்திர போராட்ட தியாகி

சங்கர நாராயணன் தமிழகத்தின் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாத்தா சுந்தரேசன் சுதந்திர போராட்ட தியாகி. அப்பா சேதுராமன் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றவர். ரமா சங்கரின் பூர்வீகம் திருநெல்வேலி.

ஏழு நாட்களும்

பூத்து குலுங்கும்

வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 93615 00327, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement