மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளியா? 'ஹூம்' சொல்லுங்க... அலுவலர் வருவாங்க...

சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதில், 85 வயது பூர்த்தி அடைந்த மூத்த குடிமக்கள், குறைந்தபட்சம், 40 சதவீதம், இயலாமை உள்ள மாற்றுத்
திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடி, தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான, '12டி' படிவத்தை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடி வழங்கி வருகின்றனர்.


வாக்காளர்கள், அந்த படிவத்தை பூர்த்தி செய்து, ஏப்., 3க்குள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் திரும்ப வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள், அந்த படிவத்துடன், வேறு எந்த கூடுதல் சான்று, உறுதிமொழி எதுவும் கொடுக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளி வாக்காளர், அடையாள அட்டை நகலை இணைக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், சுகாதார சான்று நகல் வைத்திருக்க வேண்டும்.வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தவரின் வீட்டுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருவர், ஒரு வீடியோகிராபர், நுண் பார்வையாளர் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய குழுவினர் வருவர்.
வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அந்த வாக்காளரிடம், தபால் ஓட்டுச்சீட்டில் ஓட்டை பதிவு செய்து, ரகிசியம் காக்கப்படும்.
படிவத்தில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு, குழு வருகை குறித்து முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும். முதல் வருகையின்போது வாக்காளர் இல்லையெனில், 2வது வருகை விபரம் தெரிவிக்கப்படும். 3வது வாய்ப்பு கிடையாது. வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போடும் வசதியை, விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யும் வாக்காளர், ஓட்டுப் பதிவு நாளில் நேரடியாக வந்து ஓட்டுப்போட முடியாது.
மேலும், 2வது வருகையின்போதும் வீட்டில் இல்லாத வாக்காளர், தபால் ஓட்டுச்சீட்டு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஆகிய இரண்டிலும் ஓட்டுப்போடும் வாய்ப்பை இழக்க நேரிடும். தகவல் பெற, 1800-425-7020 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம் என, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement