சென்னை, புறநகரில் 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுது! : அலட்சியம் கூடாது என எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், காய்ச்சல், சளி, இருமலால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 'மெட்ராஸ் ஐ' என்ற கண் நோய் பாதிப்பாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான, 'என்ட்ரோ, அடினோ' ஆகிய இருவகை வைரஸ் தொற்றால், 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு ஏற்படுகிறது.
காற்று வாயிலாக எளிதில் பரவக்கூடிய, இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் வாயிலாகவும், மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடும்.
குறிப்பாக, குளிர்காலம் முடிந்து வெயில் காலம் துவங்கும் பருவநிலை மாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம், 'மெட்ராஸ் ஐ' தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவற்றால் பாதிக்கப்படுவோருக்கு, கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மெட்ராஸ் ஐ பாதிப்பை பொறுத்தவரை, 90 சதவீதம் குணப்படுத்தக்கூடியது மற்றும் இயல்பாக குணமடையக்கூடியது. இருப்பினும், அலட்சியம் காட்டும்பட்சத்தில் கண் பார்வை பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என, கண் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிப்பு ஏற்பட்டால், கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி நல்ல நீரால் கழுவ வேண்டும். கண்களுக்கு போதியளவில் ஓய்வு அளிக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு உட்கொள்ளுதல், நல்ல உறக்கம் வாயிலாக கண்ணுக்கு ஓய்வு போன்றவற்றால், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய உதவும்.
இதுகுறித்து, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
சமீபத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தை பார்க்க கூச்சம் ஆகியவை, 'மெட்ராஸ் ஐ' அறிகுறிகள்.
கண்ணில் கருப்பு நிற படலத்தின், அடுக்கான கருவிழியில் தொற்று இருந்தால், அதனால் மங்கலான பார்வை ஏற்படக்கூடும்.
இந்த தொற்றால், சில நோயாளிகளுக்கு கண் வீக்கம், அழற்சியை ஏற்படுத்தி, குணமடைவதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும்.
இந்நோய் ஏற்பட்டவுடன் உரிய சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால், அதிதீவிரமான பிரச்னையாக மாறக்கூடும். மருந்து கடையிலிருந்து, 'ஆன்ட்டிபயாட்டிக்' மருந்துகளை, 'மெட்ராஸ் ஐ' பிரச்னைக்காக வாங்கி பயன்படுத்திவிட்டு, குணமடையாமல் பலர் வருகின்றனர்.
சுயமாக மருந்து பயன்படுத்துவதையும், 'ஓடிசி' மருந்து என்ற கண் சொட்டு மருந்துகளை உபயோகிப்பதையும் நோயாளிகள் தவிர்க்க வேண்டும். கண் டாக்டர்களின் பரிந்துரைப்படி மட்டுமே, மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -:
மேலும்
-
ஓசூர் மாநகராட்சியில் நிரம்பி வழியும் கால்வாய்கள்; துார்வாராததால் துர்நாற்றத்தின் பிடியில் பொதுமக்கள்
-
ஓ.சிறுவயல் ஊராட்சி கணேசபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் சேதம்
-
தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.44.19 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
-
செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
-
குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர்; சுகாதார சீர்கேடால் கிராம மக்கள் அவதி
-
நடுவீதியில் நிற்கும் மின்கம்பத்தால் அவதி