தியாகிகள் தினம்: பகத்சிங், ராஜகுரு, சுக்தேவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

7

புதுடில்லி: தியாகிகள் தினத்தையொட்டி பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் வீரத்தைப் போற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகிய மூவரும் 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 23ம் தேதி தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தியாகிகள் தினத்தையொட்டி, பகத் சிங் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், "பாரத மாதாவின் வீரப்புதல்வர்களான பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரை இன்று நாம் மிகுந்த மரியாதையுடன் வணங்குகிறோம். தேசத்திற்காக அவர்கள் செய்த உயரிய தியாகம் நமது நினைவில் என்றும் நீங்காது இருக்கும். இளம் வயதிலேயே, அசாதாரணமான துணிச்சலையும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர்.

காலனித்துவ ஆட்சிக்கு அஞ்சாமல், தங்கள் உயிரை விட தேசமே மேலானது என்ற உறுதியுடன் தங்களின் பாதையை தேர்ந்தெடுத்தனர். நீதி, தேசபக்தி மற்றும் அச்சமின்மை போன்றவையால் இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் தேசப்பற்று எனும் நெருப்பை மூட்டிக்கொண்டிருக்கின்றன, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement