பொன்னேரியில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

பொன்னேரி: பொன்னேரி தொகுதியில் மூன்று இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனைகளில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 3.02 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பொன்னேரி சட்டசபை தொகுதியில், தேர்தல் நடைமுறைகளை கண்காணிப்பதற்காக, தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு என, 18 குழுக்குள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை, சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றன.

நேற்று காலை, பொன்னேரி தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படையினர், பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். பொன்னேரி நோக்கி சென்ற 'சுசூகி கிராண்ட் விட்ரயா' காரில் பயணித்த சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம், 1.15 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சோழவரம் பி.டி.ஓ., காளியம்மாள் தலைமையிலான குழுவினர், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வாகன சோதனை செய்தபோது, 'மாருதி ஸ்சுவி' காரில் பயணித்த, ஆண்டார்குப்பத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர், உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த, 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கூட்டுறவு சார் - பதிவாளர் விஜயராகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், சைனாவரம் அருகே சென்ற 'மகேந்திரா டிரக்'கை சோதனை செய்தபோது, அதிலிருந்த பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியைச் சேர்ந்த வேல்ராஜன் என்பவரிடம் இருந்து, 87,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மூன்று இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, 3.02 லட்சம் ரூபாயை, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement