தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த தனி தாசில்தார் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

விழுப்புரம், சாலாமேடு என்.ஜி.ஓ., காலனி, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 57; இவர் கடந்த 2018ம் ஆண்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடமாறுதலாகி தற்போது மீண்டும் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

சட்டசபை தேர்தலையொட்டி விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வேல்முருகன் வீட்டிற்கு, நேற்று காலை 7:30 மணிக்கு வந்த, கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டின் உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டு விட்டு தாசில்தார் வேல்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, வீட்டிலிருந்த ஆவணங்கள், சொத்துகள், மின்னணு சாதனங்கள், பணம், நகை போன்றவை குறித்தும் சோதனை நடத்தினர். வீட்டின் ஓரமாக நிறுத்தியிருந்த புதிய சொகுசு கார், பழைய கார் ஆகியவற்றையும் சோதனை செய்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு விக்கிரவாண்டியில் தனி தாசில்தாராக பணிபுரிந்தபோது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் விசாரித்துள்ளனர். அப்போது, 6.40 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், நேற்று சோதனை நடத்தப்பட்டது. மாலை 5:00 மணி வரைநடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

தேர்தல் பணியில் உள்ள ஒரு தாசில்தார் வீட்டில், நீண்ட நேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement