கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம், கமதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் கல்குவாரி, கிரஷர் லாரிகளால் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகப்படியான பாரம் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என, வேகமாக லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

மதுராந்தகம் தாலுகாவில் விழுத மங்கலம், தச்சூர், ஜமீன் எண்டத்துார், ஆணைக்குன்னம், ஒரத்தி, ஊனமலை, பாக்கம், சிலாவட்டம், ராஜபாளையம் மற்றும் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரியவெண்மணி, தொன்னாடு, சரவம்பாக்கம், ஓணம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுகின்றன.

கல்குவாரிகளில் இருந்து லாரிகளில் ஜல்லி, எம்- - சாண்ட், பி- -சாண்ட், கருங்கற்கள் கட்டுமான பணிகளுக்காக லாரிகள் மூலமாக பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

குவாரியில் இருந்து பாரம் ஏற்றிச் செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் செல்வதால், லாரிகளை பின் தொடர்ந்து செல்லும், பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், லாரிகள் அரசு விதிகளை மீறி அதிகப்படியான பாரங்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்வதால், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

கல்கு வாரி லாரி விபத்துகளால் செய்யூர் --- மதுராந்தகம், சென்னை --- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, வந்தவாசி - செய்யூர் நெடுஞ்சாலை மற்றும் சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வரும் ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிகமாக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 2022 முதல் 2025 வரை, 3 ஆண்டுகளில் மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் 30க்கும் மேற்பட்டோர் கல்குவாரி லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.

மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்குவாரி லாரிகளால் விபத்தில் சிக்கி 2022ல், உயிரிழந்த நபர்கள் எட்வின் ராஜ், 41, எத்திராஜுலு, 68, ராஜப் பிரியா, 31, எஸ்கர் சாரல், 77 மற்றும் மேல்மருவத்துார் காவல் நிலைய எல்லைக்குள் காட்டுக்கூடலுார் பகுதியைச் சேர்ந்த சேகர், 43, அனிதா, 32, ஹாஷிகா, 15 உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், கல்குவாரி லாரிகள் மோதியதில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், படுகாயங்களுடன் உடல், உறுப்புகள் பாதிக்கப்பட்டு கை, கால் துண்டிக்கப்பட்டு உள்ளவர்களும் அதிகம். மேலும், கல்குவாரி லாரிகளால் ஏற்படும் சிறிய விபத்துக்களில், இரு தரப்பும் சுமுகமான பேச்சு நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் செல்வது வாடிக்கையாக உள்ளது.

போக்குவரத்து போலீஸ் ஒருவர் கூறியதாவது:

கல் குவாரி லாரி விபத்துக்களில் மரணம் மற்றும் படுகாயம் அடைந்த போது, கல்குவாரி லாரிகளில் அதிக பாரம் இருந்ததும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவு பாரம் ஏற்றிச் சென்றால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

ஆனால், கல்குவாரி லாரி உரிமையாளர்கள் லாப நோக்குடன் செயல்படுவதால், இவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

நேர கட்டுப்பாடு அவசியம் கல்குவாரிகளில் இருந்து கிரஷர்களுக்கு கருங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து எம் - சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரையிலும், இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல், கல்குவாரி லாரிகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கிராம சாலைகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும், சாலை விரிவாக்கம் செய்யப்படாத நெடுஞ்சாலைகளிலும் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் இணைந்து, கல்குவாரி நிர்வாகத்திடம் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பேச்சு நடத்தி, வேகமாக செல்லும் லாரி ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மணி, 42, சமூக ஆர்வலர், தொன்னாடு.

Advertisement