அரசு பள்ளியில் அடிப்படை வசதி கோரி பி.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி, பி.டி.ஓ., அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 110 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் மொத்தமுள்ள மூன்று கட்டடங்களில், ஒரு கட்டடம் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது. மற்ற இரு கட்டடங்கள் வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு கட்டடம் 'ஸ்மார்ட்' வகுப்பறையாக உள்ளது.

இடநெருக்கடியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாழடைந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருகிறது.

வகுப்பறை கட்டடம், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கேட்டு, பல ஆண்டுகளாக பெற்றோர் போராடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இணைந்து, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பெற்றோர் கூறுகையில், 'கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா என்ற அச்சத்தில் இருக்கிறோம்' என்றனர். இதை தொடர்ந்து, பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றனர்.

Advertisement