ஏற்றுமதி வரிச்சலுகை நீட்டிப்பு தொழில்துறையினர் வரவேற்பு

கோவை: மத்திய அரசு, உள்நாட்டு வரிகளை ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி அளிக்கும் 'ரோட்டெப்' (ஆர்.ஓ.டி.டி.இ.பி.,) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இச்சலுகையை 50 சதவீதம் குறைத்து, கடந்த பிப்.23ம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஈரான் போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் சலுகையை நீட்டிக்க வேண்டும் என, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் வரும் 31ம் தேதி வரை ஏற்றுமதி வரிச்சலுகையை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

'பிரதமர், வர்த்தகத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சருக்கு நன்றி. மத்திய கிழக்கு நாடுகளின் போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய தொழில்துறைக்கு இது ஆசுவாசமாக இருக்கும். இச்சலுகை ஏப்.,1ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என நம்புகிறோம்' என்று, சைமா தலைவர் துரை ராமசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மிதுன் ராம்தாஸ், 'கடந்த 6 மாதங்களாக மூலப்பொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. செம்பு விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அலுமினியம், எஃகு, காஸ்ட் இரும்பு, பாலிமர், கேபிள்கள் விலையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வரும் ஏப்.1 முதல் உற்பத்திப் பொருட்களின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.'

'மத்திய அரசு மூலப்பொருள் விலையைக் கட்டுப்படுத்துவதுடன், வேளாண் துறையின் முக்கிய இயந்திரமான மோட்டார் பம்ப் மீதான ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement