முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு

1


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரி நிவாஸிற்கு இதுவரை உள்ளூர் திட்டக்குழுமம் சில குறைகளை சுட்டிக்காட்டி கட்டட அனுமதி தரவில்லை. ஆனாலும் அதையும் மீறி கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்த நிலையில் இதுவரை மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவித்து வருகிறது.

இக்கோயில் சார்பில் இங்கு எல்லீஸ்நகரில் ரூ.35 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு கடந்த மாதம் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தரைத்தளம், இரு தளங்களுடன் உள்ள இவ்விடுதியில் 20, 10 படுக்கைகள் கொண்ட 16 பெரிய அறைகள் உள்ளன. 8 முதல் 4 படுக்கைகள் கொண்ட குடும்பத்தினர் தங்கும் டீலக்ஸ் அறைகள், 3 அறைகள் கொண்ட சாதாரண அறைகள், விருந்தினர் அறை என மொத்தம் 28 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 278 பேர் இவ்விடுதியில் தங்க முடியும்.



வாடகையாக வார நாட்களில் ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், விடுமுறை நாட்கள், திருவிழா நாட்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விடுதிக்கான கட்டுமான பணிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் சில குறைகளை சுட்டிக்காட்டி இதுவரை அனுமதி வழங்கவில்லை. காரணம் அறநிலையத்துறை தனது பொறியாளர்களை கொண்டு தயார் செய்த 'ப்ளூ பிரின்ட்'டை உள்ளூர் திட்டக்குழுமம் ஏற்கவில்லை. தங்கள் விதிகளுக்கு புறம்பாக உள்ளது என சுட்டிக்காட்டியது.


இதை எதிர்த்து ஓராண்டுக்கு முன் கோயில் நிர்வாகம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையை அணுகியது. விசாரித்த நீதிமன்றம், 'உள்ளூர் திட்டக்குழுமம் சுட்டிக்காட்டிய குறைகளை சரிசெய்து நிவாரணம் தேடலாம்' என உத்தரவிட்டது. ஆனால் குறைகளை சரிசெய்யாமல் கட்டுமான பணி முடிந்தது. உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லாததால் மின்இணைப்பு பெற முடியவில்லை.


முதல்வர் திறந்து வைத்து விட்டார் என்ற காரணத்தால், தற்காலிகமாக அருகில் உள்ள அறநிலையத்துறை கட்டடத்தில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு புதிய விடுதிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பெயரளவில் சில அறைகள் மட்டும் 'புக்கிங்' செய்யப்படுகின்றன. முழுமையாக செயல்பட உள்ளூர் திட்டக்குழுமம் சுட்டிக்காட்டிய குறைகளை சரிசெய்தோ அல்லது அதற்குரிய மாற்று வழிகள் ஆராய்ந்தோ உடனடியாக மின் இணைப்பு பெற்றால்தான் இவ்விடுதி கட்டியதற்கான பலன் கிடைக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர்.

Advertisement