திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் கமிஷனர் அறிவிப்பு

திருத்தணி: திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், நாளை முதல் இயக்கப்படும் என நகராட்சி ஆணையர் கன்னியப்பன் அறிவித்துள்ளார்.

திருத்தணி நகராட்சியின் பின்புறம் உள்ள அண்ணா பேருந்து நிலையம் குறுகிய இடத்தில் இயங்கி வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, கடந்த, 2022ல், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 20 கோடி ரூபாயில், நான்கரை ஏக்கர் பரப்பில், நவீன பேருந்து நிலைய பணிகள் துவங்கி கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த புதிய பேருந்து நிலையத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கடந்த 4ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பேருந்து நிலையத்தில் சில பணிகள் முடிவடையாததால், பேருந்துகள் நேற்று வரை இயக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், திருத்தணி நகராட்சி ஆணையர் கன்னியப்பன், நேற்று அரசு போக்குவரத்து பணிமனை மேலாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement