செயற்கையாக பழுக்க வைத்து பழங்கள் விற்பனை: புகாரளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு
கோவை: தர்பூசணி, மாம்பழம் போன்றவை செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்கிறோம். இதுசார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என, உணவு பாதுகாப்புத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவது குறித்து கள ஆய்வு நடத்தப்படுகிறது. பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் முன், மார்க்கெட்களில் விற்கப்படும் பழங்களின் மாதிரி பரிசோதிக்கப்படும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய வழிகாட்டுதல் படி, எத்திலின் வாயு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி, பழங்களை பழுக்க வைக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் உடலுக்கு ஏற்படாது.
இதன் பவுடரை நேரடியாக, பழங்கள் மீது தெளிக்கக் கூடாது. இதனால், அசிட்டிலின் வாயு உற்பத்தியாகி, சாப்பிடுவோருக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வாழைக்காய்களில், எத்திலின் ஸ்பிரே அடித்து பழுக்க வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்கள், முழுமையாக ஒரே நிறத்தில் இருப்பதோடு, அதன் இயற்கையான மணம், சுவையில் வித்தியாசம் இருக்கும்.
தர்பூசணியில் நிறத்திற்காக, எரித்ரோசின் என்ற சிவப்பு நிற சாயத்தை ஊசி மூலம் செலுத்துவதாக, புகார் அளிக்கப்படுகிறது.
அப்படி செய்தால், பழம் அழுகிவிடும் என்பதால், வாய்ப்புகள் குறைவு. இது தொடர்பான புகார்கள் இருந்தால், 94440 42322 என்ற எண்ணிலோ, vunavupugar@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரசாயனம் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்கள், முழுமையாக ஒரே நிறத்தில் இருப்பதோடு, அதன் இயற்கையான மணம், சுவையில் வித்தியாசம் இருக்கும்.