சீனாவின் 'ரேயான்' இழை குவிப்பு தடுப்பதற்கு வரி விதிக்க பரிந்துரை

புதுடில்லி :
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 'விஸ்கோஸ் ரேயான்' இழை மீது பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும் என, நிதி அமைச்சகத்துக்கு இந்திய பொது வர்த்தக தீர்வகம் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

செயற்கை பட்டு நாரிழை என்றழைக்கப்படும் விஸ்கோஸ் ரேயான் நீள இழை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஜவுளி துறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரேயான் இழை மீது ஒரு டன்னுக்கு 35,898 ரூபாய் முதல் 99,603 ரூபாய் வரை பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும்.

மனிதர்களால் தயாரிக்கப்படும் ரேயான் இழைகள், அளவுக்கதிகமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் இதன் குவிப்பு அதிகரிப்பதோடு உள்நாட்டு விலையின் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டுவிட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாரிழைக்கு வரி விதிக்கப்படும்.

Advertisement