டோங்கா தீவு 7.6 ரிக்டர் நிலநடுக்கம்: எரிமலை வெடிக்குமா?

வெலிங்டன்: பசிபிக் பெருங்கடலில், நியூசிலாந்துக்கு அருகே உள்ளது டோங்கா தீவு. மொத்தம், 171 தீவுகளை உள்ளடக்கிய இந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான நெயாபு பகுதியில், நேற்று 235 கி.மீ., ஆழத்தில், 7.6 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, நேற்று முன்தினம் இங்குள்ள ஹிஹிபோ பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

கடந்த, 2022 ஜனவரியில் இதன் அருகேயுள்ள ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலை வெடித்து பெருமளவிலான குழம்புகளை கக்கியது. இதனால், எரிமலை மீண்டும் வெடிக்குமோ என்று அஞ்சப்பட்டது. ஆனால் எரிமலையும், நில நடுக்கமும் ஒரே நேரத்தில் ஏற்படுவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Advertisement