விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த தி.மு.க., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு குமுறல்
மதுரை: 'நிலங்களை அபகரிக்கக்கூடாது என சாத்வீக முறையில் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்,' என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில கவுரவத் தலைவர் ராமன் கூறினார்.
அவர் கூறியதாவது:
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றியதால் ஒட்டுமொத்த விவசாயிகளும் தமிழக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். விவசாய பட்ஜெட் மறுமலர்ச்சி பட்ஜெட் என்றது வெறும் வாய்ப்பேச்சாகி போனது.
நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து முன்னறிவிப்பின்றி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறித்துள்ளது தமிழக அரசு. விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக இச்செயலை செய்துள்ளது.
திருவண்ணாமலை செய்யாறு பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க திட்டமிட்ட தமிழக அரசை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தது. தங்களது நிலத்தை தரமறுத்து சாத்வீக முறையில் போராடிய விவசாயிகளை போலீசார் சிறையில் அடைத்தனர். நிலத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தின் கீழ் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது இல்லை.
காஞ்சிபுரம் பரந்துார் விமான நிலையத்திற்காக 10ஆயிரம் ஏக்கர் பறிபோனது. தஞ்சை, நாகை, திருவாரூர், கும்பகோணம் பகுதிகளில் 33 இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மீத்தேன் உட்பட எண்ணெய் கிணறு எரிவாயு திட்டத்தை அரசு செயல்படுத்த முனைகிறது. மேற்கு வங்கத்தில் இருந்து விரட்டப்பட்ட இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி காவிரி டெல்டா விவசாய பகுதியையே அழிக்க நினைக்கிறது. பின் உணவு உற்பத்தி எப்படி சாத்தியமாகும்.
உணவுத்துறையை இரண்டாக பிரித்து பொதுத்துறை துவங்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை உருவாக்கி நெல் கொள்முதல் மையத்தை கொண்டு வந்ததே முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். டெல்டா மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் மையங்களை தனியாருக்கு தாரை வார்த்து விட்டது தி.மு.க., அரசு.
விவசாயிகளுக்கு நெல்கொள்முதல் மையங்கள் வழங்க வேண்டிய ரூ.975 கோடியை ஏழு மாதங்களாக போராடி பெற்றுள்ளோம். தந்தை கருணாநிதி தொடங்கிய திட்டத்தை மகன் ஸ்டாலின் மூடி வைத்து பெருமை தேடியுள்ளார்.
எங்களிடம் இருந்து ஒரு லட்சத்து 25ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்த தி.மு.க.,விற்கு ஓட்டு போடக்கூடாது என அனைத்து விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.