புதுச்சேரியில் 6 தொகுதிகளில் நட்பாக போட்டி: காங்., அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் காங்., கட்சி 6 தொகுதிகளில் நட்பாக போட்டியிடுவதாக, அக்கட்சியின் மேலிட செய்தி தொடர்பாளர் டோலி ஷர்மா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்., -16; தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் 14 போட்டியிட பங்கீடு செய்யப்பட்டது. தி.மு.க., தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மனு தாக்கல் செய்தவர்களுக்கு மட்டும் 'பி' படிவம் வழங்கியது. இதனால், பி படிவம் வழங்காதவர்களின் மனுக்கள் தள்ளுபடியாகின.

ஆனால், காங்., கட்சியினர் மனு தாக்கல் செய்த 22 தொகுதிகளிலும் 'பி' படிவத்துடன் தாக்கல் செய்துள்ளனர். இதனால் அனைவரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை நேற்று வரை யாரும் வாபஸ் பெறவில்லை.

இன்று மாலை 3:௦௦ மணிக்குள் மனுக்கள் வாபஸ் பெறாவிட்டால், இந்த தொகுதிகளில் இண்டி கூட்டணியை சேர்ந்த தி.மு.க.,- காங்., இடையே போட்டியிடும் நிலை உள்ளது.

இந்நிலையில் காங்., தேசிய செய்தி தொடர்பாளர் டோலி ஷர்மா கூறுகையில், ''காங்., கட்சி கூட்டணியில் ஒதுக்கிய தொகுதிகளை தவிர மேலும், 6 தொகுதிகளில் நட்பு ரீதியாக போட்டியிடுகிறது,'' என கூறினார்.

இது, 'இண்டி' கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. காங்., போட்டியிடும் தொகுதிகளில் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட தி.மு.க.,வினர் முடிவெடுத்துள்ளனர்.

Advertisement