பரமக்குடியில் ராமர், சீதா திருக்கல்யாணம்: ராமநவமி கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது.

பரமக்குடி நகராட்சி எதிரில் ஆஞ்சநேயராக புனித புளிய மரத்தை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அருகில் ராமர், சீதா, லட்சுமணன் சன்னதி உள்ளது. இங்கு ராம நவமி விழாவையொட்டி கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. தினமும் பல்வேறு வாகனங்களில் ராமர் உலா வருகிறார். புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை வேண்டி விரதம் இருந்தவர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து ராமநவமி விழாவும், நேற்று காலை சங்கர மடத்திலிருந்து ராமர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் கோயிலை அடைந்தார். பின்னர் 12:00 மணிக்கு சீதா, ராமர் திருக்கல்யாணம் மகா மண்டபத்தில் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள் தரிசனம் செய்து திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர்.

விவாக சடங்குகள், மாலை மாற்றல் நடந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு பல்லக்கில் சுவாமிகள் பட்டணப்பிரவேசம் சென்றனர். இன்று தீர்த்தவாரி, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. நாளை ஆஞ்சநேயர் அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement