வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் திருவிழா விமரிசை

திருவாலங்காடு:வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நேற்று நடந்தது.

திருத்தணி முருகன் கோவிலின் உபக் கோவிலான, வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோத்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு, 10:00 மணிக்கு, யானை வாகனத்திலும் சோமாஸ்கந்தர் வீதியுலா வந்தார்.

பிரம்மோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

காலை, 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பின், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு மாட வீதிகளில் திருவீதியுலா வந்த தேர், பகல், 1:30 மணிக்கு காளியம்மன் கோவில் வளாகத்தில் நின்றது. பின், மாலை, 3:30 மணிக்கு தேர் அங்கிருந்து புறப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று, காலை, 9:00 மணிக்கும், இரவு, 9:00 மணிக்கும், நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாணம் அபிஷேகம் நடக்கிறது. நாளை, உற்சவர் சோமாஸ்கந்தர் பல்லக்கு மற்றும் கேடயம் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 1ம் தேதி வரை, பிரம்மோத்சவ விழா நடக்கிறது.

Advertisement