முழு அளவில் 'உஷார்' நிலை பறக்கும் படைக்கு உத்தரவு

கம்பம்:சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் 24 மணிநேரமும் முழுஅளவில் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என பறக்கும் படை, நிலை கண்காணிப்பிற்கு குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப். 23 ல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ல் துவங்குகிறது. பிரதான அரசியல் கட்சிகளான அதி.மு.க., தி.மு.க. நா.த.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது. த.வெ.க. இன்று வெளியிடுகிறது .

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணம் மற்றும் பரிசு பொருள்களின் நடமாட்டத்தை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு என தொகுதிக்கு 3 குழுக்கள் இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரதான கட்சிகளில் 'கவனிப்புகள்' ஆரம்பமாகும். குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய நாளில் பட்டுவாடாவிற்கென பணம் ஆங்காங்கே கொண்டு சென்று பதுக்குவார்கள். எனவே இனிமேல் பறக்கும் படை,நிலை கண்காணிப்பு குழுவினர் முழு அளவில் உஷார் நிலையில் இருக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இரவில் முழு அலர்ட் டாக இருக்க தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது.

Advertisement