தேவிகுளம் தொகுதியில் மும்முனை போட்டி தொகுதி நிலவரம்

மூணாறு:தேவிகுளம் சட்டசபை தொகுதியில் முதன்முதலாக இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது.

தேவிகுளம் சட்டசபை (தனி) தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறனர். இந்த தொகுதியில் தமிழர் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு, மாநிலத்தில் தமிழர் ஒருவர் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு செல்லும் அந்தஸ்து கொண்டது. இத்தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி ஆகியோர் சார்பிலான எம்.எல்.ஏ.க்கள் மாறி,மாறி வெற்றி பெற்று வந்தனர்.



அந்த நிலை கடந்த 30 ஆண்டுகளாக மாறியது. காங்கிரசை சேர்ந்த மணி தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 1991 முதல் 2006 வரை எம்.எல்.ஏ.வாகவும், அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ராஜேந்திரன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 2006 முதல் 2021 வரை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தனர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த ஏ.ராஜா எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

போட்டி: தற்போது தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் களத்தில் உள்ளபோதும் ' சிட்டிங்' எம்.எல்.ஏ., ராஜா, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எப்.ராஜா, பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இடதுசாரி வேட்பாளர்:

இந்த கூட்டணியில் போட்டியிடும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ. ராஜா கடந்த தேர்தலில் ஜாதி சான்றிதழ் தொடர்பாக பிரச்னையில் சிக்கி, அவரை கேரள உயர் நீதிமன்றம் எம்.எல்.ஏ. பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்ததால் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்த இயலாதது, தொகுதி மக்களுடன் தொடர்பு வைத்து கொள்ளாதது ஆகியவை பின்னடைவாக பொதுமக்கள் கருதுகின்றனர்.



காங்கிரஸ் கூட்டணி:

இந்த கூட்டணியில் போட்டியிடும் எப்.ராஜா மக்கள் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் என்றபோதும் புதுமுகமாக கருதுகின்றனர். தேவிகுளம் தொகுதி தோட்டம், விவசாயம் என இரு பகுதிகளை கொண்டது. விவசாய பகுதியில் நன்கு அறிமுகம் உள்ளபோதும் தோட்ட பகுதியில் சரிவர அறிமுகம் இல்லாதது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.

பா.ஜ., வேட்பாளர்:

மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், சமீபத்தில் பா.ஜ., வில் இணைந்ததால் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தொகுதி முழுதும் நன்கு அறிமுகம் உள்ளவர் என்பதால், அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்கள், தொகுதி மக்களுடன் நெருக்கம் ஆகியவை தேர்தலில் கை கொடுக்கும் என கட்சியினர் நம்புகின்றனர்.

மும்முரம்: ராஜேந்திரன் களம் காண்பதும், தொகுதியில் முதன்முதலாக மும்முனை போட்டி நிலவுவதும் இரு முன்னணிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் 20 ஆண்டுகளாக கைவிட்டு போன தொகுதியை மீட்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணியும், தொகுதியை தொடர்ந்து ஐந்தாவது முறை தக்க வைத்து கொள்ள வேண்டும் என இடது சாரி கூட்டணியும், தொகுதியில் முதன்முதலாக தாமரை மலர வேண்டும் என்ற உறுதியுடன் பா.ஜ., கூட்டணியும் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

-----------------

Advertisement