தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள்
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் ஆழ்குழாயினுள் செல்லும் இரும்புக் குழாய்கள் துருப்பிடித்து துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
இக் கிராமத்தின் தெற்கு பகுதியில் வசிக்கும் ஐநுாறுக்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில் போதிய பராமரிப்பு இன்றி மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்கள் துருப்பிடித்து துண்டித்து காணப்படுகிறது.
அதனால் இப்பகுதியில் 30 நாட்களாக தண்ணீர் விநியோகிக்கவில்லை. தெருக் குழாயிலும் தண்ணீர் வராததால் மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ., அலைந்து திரிவதால், தேர்வு நேரத்தில் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. பெற்றோர் வேலைக்குச் செல்ல முடியாது அவதிப்படுகின்றனர்.
கோயில் திருவிழா நடைபெறுவதால் வெளியூர் பக்தர்களும் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். குடம் ரூ.15 கொடுத்து வாங்கும் அவலம் நிலவுகிறது. ஊராட்சி, ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. மாவட்ட நிர்வாகம் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.